/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஒப்புக்கு நடக்கும் ஜமாபந்தி: ஒப்புகை சீட்டு வழங்கப்படுமா?ஒப்புக்கு நடக்கும் ஜமாபந்தி: ஒப்புகை சீட்டு வழங்கப்படுமா?
ஒப்புக்கு நடக்கும் ஜமாபந்தி: ஒப்புகை சீட்டு வழங்கப்படுமா?
ஒப்புக்கு நடக்கும் ஜமாபந்தி: ஒப்புகை சீட்டு வழங்கப்படுமா?
ஒப்புக்கு நடக்கும் ஜமாபந்தி: ஒப்புகை சீட்டு வழங்கப்படுமா?
ADDED : மே 26, 2010 01:09 AM
பொன்னேரி : கண் துடைப்புக்கு நடத்தப்படும் ஜமாபந்தியில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மலைபோல் தேங்கி கிடக்கின்றன.
இம்மனுக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் மே, ஜூன் மாதங்களில் தாலுகா அலுவலகங்களில் பிர்கா வாரியாக ஜமாபந்தி நடந்து வருகிறது. இதில், பொதுமக்கள் பட்டா பெறுதல் , பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பி வருகின்றனர். வீட்டுமனை, முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களும் பெறப் படுகின்றன. ஆண்டுதோறும் நடக்கும் ஜமாபந்தியில் ஆயிரக்கணக்கான மனுக்கள் மலைபோல் குவிகின்றன. இம்மனுக்களில் சிலவற்றை மட்டும் உடனடியாக பரிசீலித்து அதற்கு தீர்வு காணப்படுகிறது. மற்ற மனுக்கள் குப்பை காகிதங்களாக கிடப்பில் போடப்படுகின்றன. ஜமாபந்தி முடிந்தவுடன் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை. ஒரு சில பிரச்னைகளுக்கு பொதுமக்கள் ஜமாபந்தியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து மனு கொடுத்தும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. பொன்னேரி அடுத்த சின்னகாவணம் பகுதியில் வீட்டுமனை கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜமாபந்தியில் மனு கொடுத்தும் பலனில்லை. அதேபோல் அங்குள்ள கோவில் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அதில் மிளகாய் சாகுபடி, நெல் சாகுபடி செய்யப்படுவதாக பொய்யான தகவல்களை பதிவு செய்து வருவதை தடுக்க வேண்டும் என்று கடந்த இரு ஆண்டுகளாக மனு கொடுத் தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
ஜமாபந்தியின்போது முக்கிய பிரமுகர்களின் பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்படுவதாகவும், பொதுமக்களின் பிரச்னைகளை வருவாய்த் துறையினர் கண்டுகொள்வதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், பொதுமக்கள் கொடுக் கும் மனுக்களுக்கு எவ்வித ஒப் புகை சீட்டும் வழங்கப்படுவது இல்லை. ஜமாபந்தி முடிந்தவுடன் பொதுமக்கள் வருவாய்த்துறை அலுவலகத்தில் கொடுத்த மனுக்கள் குறித்து கேட்டால் "மனு கொடுத்தீர்களா?, மனுவை காணவில்லை, வேறு மனு எழுதி கொடுங்கள்' என்று அலட்சியமாக கூறுகின்றனர்.
அலுவலகங்களில் நடக்கும் ஜமாபந்திகள் வெறும் கண்துடைப்புக்காக நடத்தப்படுகிறது என்று பொதுமக் கள் வேதனையுடன் கூறுகின்றனர்.